கருணையின் கையசைப்பு - சிறுகதை

 கருணையின் கையசைப்பு





       தொடரும் நான்கு நாள் மழையினால் அந்த சுற்றுச்சூழல் முழுவதும் குளிரேறி இருந்தது. அங்கும் இங்குமாக மழையினால் முகம் சுளிக்கும் மக்கள் ஆனால் மழையை வெறுப்பவர்கள் அல்ல. காவலர்களும் நடைமேடைகளில் ரைன்கோட் அணிந்து மறைவான இடங்களில் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று பேர் சிகரெட் புகைத்து கொண்டிருந்தார்கள். சிறு குறு வெற்றிலை எலும்பிச்சை வாழ இலை வியாபாரிகள் தங்களின் மூட்டைகளின் முடிச்சை கழற்றி சேரும் செகதியுமான தரையை வெள்ளை சாக்குகளால் போர்த்தி வழக்கமான வியாபாரத்திற்கு ஆயத்தமானார்கள். வாகனங்களின் இரைச்சலும் தொடங்கின. சமிக்கை விளக்கின் சிவப்பு வண்ணத்தை எரிவதை பார்த்ததும் கை சட்டையை மடக்கி புகைத்துகொண்டே சாலையை தேய்த்தவாறே கடந்தான் அவன். பிறகு நேரு சிலையை கடந்தான். நெருஞ்சி முட்கள் மேல் நடப்பது போல் நிதானமாக அடி எடுத்துவைத்தான். நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்தவர்களில் ஒரு சிலர் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். காவலர்களும் கூட. பழைய பேருந்து நிலையம் முன் நின்று சிகரெட்டை அறுந்து போன இடதுகால் செருப்பால்  அனைத்தான். சுற்றிலும் அந்த கடையை தேடினான். புகைப்பட நிலையமும் உணவகமும் பேக்கரி கடைகள் மட்டுமே தென்பட்டது. அருகில் இருப்பவர்களிடம் விசாரித்ததில் பேருந்துகள் வெளியே செல்லும் வாயிலில் இருப்பதாக சொன்னார்கள். செருப்பை தேய்த்துக்கொண்டே போக அந்த கடையை அடைந்தான். சாக்கடையில் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகள் மீது மழை நீர் தெறித்து நாலா பக்கமும் கழிவுநீர் சிதறிக்கிடந்தது. அதற்கு அருகில் பழைய கட்அவுட் ஐ விரித்து பெரிய கொடையை ஊன்றி, இரண்டு மூன்று வயதான பெண்கள் அந்த குடையை சுற்றி நின்றிருந்தார்கள். தேங்கிய மழைநீர் குடையின் ஓரத்தில் மிச்சம் இருந்தது. மார்பு மயிர் தெரிய குடையின் பக்கவாட்டில் கால்களைப் பின்னி அகுரா முறையில் சிறிய முக்காலியில் உட்கார்ந்திருந்தார் அவர். அவர் முன்னே இரண்டு ஷூக்களும் ஐந்து பியிந்த செருப்புகளும் இருந்தன. அவர் கைகள் அந்த வயதான பெண்களின் கை பையை குத்தூசியால் சரி செய்துகொண்டிருந்தது. ' ணே, இந்த செருப்புல ஓரத்ல மட்டும் ஒரு தை தச்சு குடுங்க ' என்று குடைக்குள் தலை நீட்டி செருப்பை காண்பித்தான். அவர் வாயிலிருந்த நூலை கடித்துக்கொண்டு செருப்பை மட்டுமே பார்த்து தலையசைத்தார். அந்த எண்ணெய் வழியும் நெற்றியில் விபூதிக்கோடு புருவம் இறுதிவரை நீண்டிருந்தது. வெள்ளை பழுப்பு நிறம் கலந்த தலைமயிர். ஆன்மிகம் நிறைந்த முகம் மேல் சட்டையில் சாராய வாடை. அந்த பையை சரிசெய்து அவர்களிடம் குடுத்துவிட்டு கை அசைத்தார். தலையும் கண்களும்கூட கை அசைந்த போக்கில் சென்றது.

   ' எவலோ யா ' என்று அவர்கள் கேட்க.

 ' அதெல்லா வேணா மா நீ போ ' என்று தலை மட்டும் அசைத்தார் கண்களும் இடுங்கின. கையில் இருந்த பழைய நகைக்கடை மணிபற்சை சேலையில் முடிந்து

 ' இம் செரிங்கய்யா செரிங்கையா ' என்று மூச்சுவாங்கினாள். அருகிலிருந்த வட்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்த வயதானவள் அவளின் தோள்பட்டையில் கைவைத்து அழைத்துக்கொண்டு போனால். அவனது செருப்பை வாங்கி தொடையில் வைத்து நூலை கோர்த்தார். கருவிழி இரண்டும் விரிய தொலைவில் சென்ற அந்த பெண்களையும் அவரையும் இமைக்காமல் பார்த்தான்.  வியப்பிர்க்குண்டான முகமாக மாறியது. அடுத்து எப்போது மழை பெய்யும் என்பது தெரியவில்லை. மழை பெய்ந்தால் இந்த சிறு கடையை உடனடியாக காலி செய்ய வேண்டுமே. ஒரு நாளைக்கு வருமானம் என்ன வரப்போகிறது? அதுவும் இந்த மழை காலங்களில்!. ஏன் அவர்களிடம் பணம் எதுவும் கேட்கவில்லை? அவன் நாக்கில் எச்சிலோடு அந்த கேள்வியும் சேர்ந்தே சுரந்து கொண்டிருந்தது.

 " நே, தெரிஞ்சவங்களா! ஏன் காசு வாங்கள அவங்கட்ட " என்று கேட்டான். ஒரு நொடி அவனை பார்த்துவிட்டு கீழே குனிந்து பியிந்த செருப்பை பார்க்க ஆரம்பித்துவிட்டார். பதில் எதுவும் சொல்லாமல் உதாசீனம் செய்துவிடுவார் போல என நினைத்து அவனது முகத்தசைகள் இறுகியது போல உணர்ந்தான். செறுப்பில் ஊசியை குத்திவிட்டு பக்கவாட்டில் வலதுகையை நீட்டி கரடுமுரடான குரலோடு

 " அந்தா இருக்கு பாரு ரோட்ல கம்பி கம்பியா, கீழ போற சாக்கடைய அது வழியா பாக்கலாம். அதுல காலு விட்டு தடுக்கி விழுந்திருச்சு அந்த அம்மா ", என்றார். 

 சிறு பெருமூச்சு விட்டு, அவரை போல் கைநீட்டி " அந்த கம்பிலயா " என்றான்.

 " ம் .. ம்... என்னம்மா கீழ என்ன இருக்குன்னு பாத்து வரவேண்டிதனமானேன்." 

        " இம்.. இம் ".

 " கூட வந்த பொம்பள அதுக்கு கண்ணு செரிய தெரியாது யா.. அப்படினுச்சு...ம்ம்.. அதுங்கட்ட போய் வாங்கி என்ன செய்ய! " என்றார். மனிதர்களின் கருணையும் மனிதாபிமானமும் இது போன்ற எதோ ஒரு ஓரத்தில் மிச்ச சொச்சமாக உயிர்ப்போடு தான் இருக்கிறது. தொடையில் வைத்து தைக்கும் பொழுது அவன் மனதையும் சேர்த்து தைத்துக்கொண்டிருப்பதாய் அவனுக்கு தோன்றிற்று. 

- நா. தேசிகன்


Comments

Popular posts from this blog

ஓஷோ - தம்மபதம் சில வரிகள்

PULAVAR KULANDHAI